“His Voice was Soaked in Sadness” — Two New Veda Patashalas and 1 New Ghoshala need our Help!

via “His Voice was Soaked in Sadness” — Two New Veda Patashalas and 1 New Ghoshala need our Help!

Advertisements

ஆதிசங்கரர் துறவறம் பெற்ற குகை

ஆன்மிக பத்திரிகை வாசகர்கள் பலருக்கும் பரிச்சயமான பெயர், ஜபல்பூர் நாகராஜ சர்மா!
ஜோதிர்லிங்க தரிசனங்கள், 12; அட்சர சக்தி பீடங்கள், 51; அதிசய ஆலயங்கள்,
அருள் தரும் அஷ்ட விநாயகர், நதி மூலங்கள், கதம்ப வனம் மற்றும் ஆன்மிக அலைகள் என, ஏழு அற்புதமான ஆன்மிக புத்தகங்களை எழுதியவர், ஜபல்பூர் நாகராஜ சர்மா.
இந்த புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள கோவில்கள் அனைத்திற்கும், நேரில் போய் தங்கியிருந்து, விவரம் சேகரித்து, தேவையான படங்கள் இணைத்து எழுதியுள்ளார்.
மேலும், பக்தர்கள் எவ்வாறு அங்கு போய் தரிசனம் பெற்று திரும்புவது என்பது பற்றி, எளிய முறையில் சொல்லும் புத்தகங்கள் தான் இவை!
அதிலும், ’51 அட்சர சக்தி பீடங்கள்’ என்ற புத்தகம், ஆன்மிகவாதிகள் பலரது உள்ளத்திலும், இல்லத்திலும் வீற்றிருக்கும் அற்புதமான புத்தகம்.
கடந்த, 1927ல் நாகப்பட்டினத்தில் பிறந்த இவர், படிக்கும் காலத்தில் சுதந்திர வேட்கை காரணமாக, மதுக்கடைகளை எதிர்த்தும், எரித்தும் கசையடி பெற்றவர். அப்போது, அவர் எழுதிய வீரியமிக்க கவிதைகள், பத்திரிகைகளில் வெளியாயின.
படித்து முடித்து, மத்திய பிரதேச மாநிலத்தில், மின் பொறியாளராக பணியில் சேர்ந்தார். கிட்டத்தட்ட, 40 ஆண்டுகள் வட மாநிலத்தில் இருந்ததன் காரணமாக, இவரது பெயருடன், ஜபல்பூரும் ஒட்டிக் கொண்டது.
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், அங்குள்ள பல கோவில்களுக்கு சென்று வந்த அனுபவத்தை, தமிழக பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி அனுப்ப, அவை வெளியாகி, வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி, இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, பின் புத்தகங்களாக வந்து, வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சி மகாபெரியவர் அருளால், ஸ்ரீ ஆதிசங்கரரின் குருவான, கோவிந்த் பகவத் பாதர் இருந்த குகையை, ஏழு ஆண்டு தேடலுக்கு பின் கண்டறிந்து, 79ல் உலகிற்கு அறிமுகம் செய்தார். இவரது சாதனைகளில் இதுவும் ஒன்று. 2,500 ஆண்டுகள் பழமையான நர்மதா நதிக்கரை அருகில் ஆதிசங்கரர் துறவறம் பெற்ற இந்த குகையை வந்து பார்த்த அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமன், குகையை கண்டறிந்த இவரை, தன் மாளிகைக்கு வரவழைத்து, கவுரவித்தார்.
பணி ஓய்வுக்கு பின், தன் பிள்ளைகள் இருக்கும் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய ஊர்களில், தற்போது மாறி மாறி இருந்து வரும் நாகராஜ சர்மா, எழுத்துப் பணியில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை.
தேடி வந்து விரும்பி கேட்பவர்களுக்கு எழுதிக் கொடுக்கிறார். இன்று போல இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, ஆன்மிகத்திற்கான தன் சேவையை இவர் தொடர வேண்டும்!
தொடர்புக்கு: 044 – 2474 0353
எல்.முருகராஜ்

மூலம்: Dinamalar varamalar

காஞ்சி பெரியவர் 10

ஆன்மிக மகான், காமகோடி பீடாதிபதி

காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியும், காஞ்சி பெரியவர், பரமாச்சாரியார் என போற்றப்படுபவருமான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (Chandrashekarendra Saraswati Swamigal) பிறந்த தினம் இன்று (மே 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# விழுப்புரத்தில் (1894) பிறந்தார். இயற்பெயர் சுவாமிநாதன். மாவட்ட கல்வி அதிகாரியான தந்தையிடம் 8 வயது வரை கல்வி பயின்றார். திண்டிவனம் ஆற்காடு அமெரிக்க மிஷன் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பில் சேர்ந்தார். பள்ளியில் நடந்த பைபிள் ஒப்பித்தல் போட்டியில் முதல் பரிசு வென்றார். பள்ளி நாடகங்களிலும் பங்கேற்று சிறப்பாக நடித்தார்.

# காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக இவரது தாய் வழி உறவினர் 1907-ல் நியமிக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு தாயுடன் சென்றிருந்தார் சுவாமிநாதன். உறவினர் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால், சுவாமிநாதனை ஆச்சாரியராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது இவருக்கு வயது 13.

# ‘சந்திரசேகரேந்திர சரஸ்வதி’ என்று இவருக்கு பெயர் சூட்டப்பட்டது. சமஸ்கிருதம், வேதங்கள், சாஸ்திரங்கள், புராணம், இதிகாசம், உபநிடதங்களை ஆழமாக கற்றார். இயல்பான அறிவுக் கூர்மையும், ஆன்மிக நாட்டமும் கொண்டிருந்த சிறுவனை ஆன்மிகப் பயிற்சிகளும் அனுஷ்டானங்களும் ஆன்மிக ஞானியாக மறுவடிவம் பெற வைத்தன. நாடு முழுவதும் ஏராளமானோர் இவரது பக்தர்களாக மாறினர்.

# பிரமிக்கத்தக்க நினைவாற்றல் கொண்டவர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, மராட்டி, ஜெர்மன், பார்சி உள்ளிட்ட 14 மொழிகள் அறிந்தவர். எளிய, இனிய, சரளமான சொற்களில் வேத சாஸ்திரங்களில் உள்ள அரிய உண்மைகளை எடுத்துக் கூறினார். இவரது ஆன்மிக உரைகள் பாமர மக்களையும் எளிதில் கவர்ந்தன.

# வேத, சாஸ்திரங்களை மக்களிடம் பரப்பவும், வளப்படுத்தவும் பல மாநாடுகளை நடத்தினார். மடத்தில் அறக்கட்டளை தொடங்கி வேதம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். பல இடங்களில் வேத பாடசாலைகள் தொடங்கப்பட்டன.

# வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஏழை, எளியவர்கள் என யார் வந்தாலும் அனைவரிடமும் சமமான கருணையும் நேசமும் காட்டுவார். மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் அன்பு செலுத்தினார்.

# சீடர்கள், பக்தர்களால் சிவ ஸ்வரூபமாகவே வணங்கப்பட்டார். ‘நடமாடும் தெய்வம்’ எனப் போற்றப்பட்டார். கவிஞர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற அரிய காவியம் படைக்க காரணமாக இருந்தார்.

# அந்நிய துணிகளைப் புறக்கணிக்கும் சுதேசி இயக்கம் நடந்தபோது, தனது ஆடைகளை கடலில் எறிந்துவிடச் சொன்னார். கதர் ஆடைக்கு மாறினார். தன் சீடர்களையும் அவ்வாறே செய்யுமாறு அறிவுறுத்தினார்.

# உண்மையான துறவு வாழ்க்கை வாழ்ந்தவர். எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்வார். பாத யாத்திரையாக நாடு முழுவதும் சுற்றி ஆன்மிகக் கருத்துக்களைப் பரப்பினார். காஞ்சி மடத்தின் தலைவராக 87 ஆண்டுகள் இருந்தார்.

# பரமாச்சாரியார், பெரியவாள், காஞ்சி பெரியவர், காஞ்சி முனிவர், மகா பெரியவர் என்றெல்லாம் பக்தர்களால் பரவசத்துடன் அழைக்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 100-வது வயதில் (1994) ஸித்தியடைந்தார்.

Source: ஆனந்த ஜோதி தி இந்து 20May2016
By ராஜலட்சுமி சிவலிங்கம்

மஹா பெரியவர் தாள் பட்ட தலம்: அருளும் அல்லிக்கேணி பார்த்தசாரதி

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலுக்குள் திவ்ய உலா வந்தவர் மஹா பெரியவர். கங்கை கொண்டான் மண்டபத்தில் ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோயில் சார்பாக வானமாமலை, அஹோபிலம், காஞ்சி காமகோடி பீடம் ஆகிய மூன்று மடங்களின் பீடாதிபதிகளுக்கு மட்டும் சடாரி மரியாதை உண்டு. அந்த வகையில் மஹா பெரியவருக்குப் பரிவட்டம் கட்டி சடாரி சாற்றியுள்ளனர்.

108 வைணவத் தலங்களுள் ஒன்றான திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் ஐந்து திவ்யதேச பெருமாள்களை ஒரே இடத்தில் தரிசிக்கும்படியாக அமைந்துள்ளது.

ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் தரிசித்து, பாடல் பெற்ற தலங்களை மங்களாசாசனம் செய்தவை என சிறப்பித்து வழங்குதல் சம்பிரதாயம். அப்படி பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது.

திருமங்கை ஆழ்வார் பாசுரத்தின் இறுதியில் தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி என்ற வாக்கின் மூலம் ஆலயத்தின் பழைமையும், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் என்ற மயிலையும் இணைந்திருந்தமை தெரிகிறது.

இரண்டு வாசல், இரண்டு துவஜஸ்தம்பம், இரண்டு கருட சன்னிதி ஆகிய தனிச் சிறப்பு கொண்ட திருக்கோயில் இது.

வைகுந்தத்திற்கு இணையான இத்திருத்தலத்தில் மூலவர் சன்னிதி என்று வழங்கப்படும் பார்த்தசாரதி சன்னிதியில் மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் ஆஜானுபாகுவாய் பகவான் ருக்மணி தேவி, அண்ணா பலராமன், தம்பி சாத்யகி, மகன் ப்ரத்தும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோருடன் குடும்ப சமேதராய் விளங்குகிறார்.

ஆனால் உற்சவத் திருநாட்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் விளங்கும் உற்சவர் பார்த்தசாரதி சுவாமிதான் திருவீதி உலா வருவார்.

இத்திருக்கோயிலில் திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீமத் வேதாந்த தேசிகர், எம்பெருமானார் எனப் போற்றப்படும் ஸ்ரீமத் ராமானுஜர், வைணவ கிரந்தங்களை பெருவாரியாக தொகுத்து இன்றுவரை அனுசந்திக்கும்படி அருளிய மகான் மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு சன்னிதிகள் அமைந்துள்ளன.

பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள்

தனிச் சன்னிதியில் ராமர், சீதா, லட்மணன், ஆஞ்சநேயருடன் சேவை சாதிக்கிறார். அருகிலேயே ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்திலேயே திருச்சன்னிதி கொண்டுள்ளார்.

மனம்குளிரப் பெருமாளைத் தரிசித்துவிட்டு சன்னிதியை விட்டு வெளியே வந்தால் ஆழ்வார், ஆச்சாரியர்களைத் தரிசித்தபடியே வரும்பொழுது சிறிய திருவடியான ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம்.

வேதவல்லித் தாயார் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். நித்ய கருட சேவையில் அருளுகின்றார் மூலவர் காஞ்சி வரதர்,

தனி வாசலும், தனி த்வஜஸ்தம்பமும் கொண்டு மூலவராக யோக நரசிம்மர் அருள்பாலிகிறார். உற்சவருக்கு அழகிய சிங்கர் என்பது திருநாமம். இந்தப் பெருமாளை `தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணி கண்டேனே` என்று போற்றுகிறது பாசுரம்.

ஆண்டாள், தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறாள். இச்சன்னிதியை அடுத்து, ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்களை விளக்கும் வகையில் சுவர் ஓவியங்களாக வரையப்பட்டு, பாசுரங்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளவிதம் அற்புதம்.

Source: ஆனந்த ஜோதி தி இந்து 14chsrsthaalpatta.jpg7-sep -2017.
By என்.ராஜேஸ்வரி

மேன்மை தரும் மேல்வெண்பாக்கம் பெருமாள் ராஜேஸ்வரி. என்

மகாலஷ்மி சமேத ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் நான்கு யுகங்களாக மேல்வெண்பாக்கம் என்ற சிறு கிராமத்திலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு வரும் வழியில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலுக்கு, 1957-ம் ஆண்டு மஹாபெரியவர் காஞ்சியில் இருந்து நடந்தே வந்து இங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்தார். அஷ்ட லக்ஷ்மிகளும் ஒரே லக்ஷ்மியாக உருவாகி பெருமாளின் அருகில் அணுக்கமாக அமர்ந்து இருக்கும் காட்சி மிக அற்புதமாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.

‘பத்ரம் புஷ்பம் பலம் தோயம்’ என்று ஒரு இலையோ ஒரு பூவோ ஏதேனும் ஒன்றை எனக்காக மனப்பூர்வமாக அளித்தால்கூடப் போதும் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா, கீதையில் கூறியிருப்பதைக் குறிப்பிட்டு இதைக் கூறியிருக்கிறார்.

கண்ணீரும் பெருமாளுக்கு உகந்தது

ஆனந்தப் புன்னகை சிந்தும் அழகிய திருமுக மண்டலத்துடன் காணக் கிடைக்கிறார் மூலவர் பெருமாள். அணுவளவும் பிரியாமல் தாயாருடன் காட்சி அளிக்கும் பெருமாளைக் கண்டவுடன் பக்தர்களின் கண்களில் ஆனந்த நீர் நிரம்பி ஆறாய்ப் பெருகுவது உண்மையில் ஓர் அதிசய அனுபவம். பக்தியில் பெருகும் இக்கண்ணீ ர்கூடப் பெருமாளுக்கு மிகவும் உகந்தது என்பது திண்ணம்.

இங்கு ஒவ்வொரு மாதமும் உத்திராட நட்சத்திரத்தன்று கலச பூஜை, ஹோமம், பெருமாளுக்கு கலசாபிஷேகம் ஆகியவை சிறப்புற நடைபெறுகின்றன.

சம்வத்ஸராபிஷேகம்

சுவயம் திருமேனியே சாளக்ராமமாக வடிவெடுத்து வந்துள்ள ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள், மேல்வெண்பாக்கத்தில் சதுர்யுகமாய் அருள்பாலித்து வருகிறார் என்கிறது தல புராணம். மூலவரான இப்பெருமாளுக்கே திருச்சன்னிதியில் சம்வத்ஸராபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கு ஸ்ரீஅஹோபில மடம் ஸ்ரீமத் அழகியசிங்கர், ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் ஆகியோர் ஆசி கூறியுள்ளனர். மேலும், காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடம், காஞ்சி ஸ்ரீஉபநிஷத் ப்ரும்மேந்திர மடம் ஆகிய மடங்களின் பீடாதிபதிகளும் ஆசி தெரிவித்துள்ளனர் .

அனுமன் தனது பிரம்மஹத்தி தோஷம் தீர இப்பெருமாளை வணங்கினாராம். ஆதிசேஷனையே கௌதுப மாலையாய் திருமார்பில் சூடியுள்ளவர் மூலவர் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள். தாயாருடன் ஐக்கிய பாவத்தில் அருள்பாலிப்பவர், காஞ்சி மஹாபெரியவரால் ஆராதனை செய்யப்பட்டவர் இப்பெருமாள். ஸ்ரீசூக்த ஸ்ரீமந்திரமே தாயார் வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம்.

ராகு, கேது தோஷ பரிகாரமாகவும் இத்தலம் விளங்குகிறது. இப்பெருமாள் ப்ரம்மஹத்தி தோஷத்தைக்கூட நீக்கிய சக்தி வாய்ந்த பெருமாளாக இருப்பதால், அனைத்துத் தோஷங்களையும் நீக்கிவிடுவார் என்பது ஐதீகம். இப்பெருமாள் சன்னிதியின் சுற்றுச் சுவரில் ராமாயணக் காட்சிகள் படங்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளது அழகு.

ஆயிரமாவது ஆண்டு காணும் ஸ்ரீராமானுஜர் தனது காலத்தில் இங்கு விஜயம் செய்துள்ளாராம். பக்தர்களுக்குக் குழந்தை வரம் அருளுவதால் இப்பெருமாளுக்குப் பிள்ளைக்காரன் சுவாமி என்ற காரணப் பெயர் உண்டு. பெருமாளும் தாயாரும் ஐக்கிய பாவத்தில் காட்சியளிக்கும் இத்திருக்கோயிலுக்கு இணைந்தோ தனித்தோ வந்தால், தம்பதியர் ஒற்றுமை ஏற்படும் என்பது நம்பிக்கை.periyava.jpg

ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா லீலா வினைதம் மூலம்: தினமலர் ஆன்மீக மலர் July Aug 2017

Continue reading ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா லீலா வினைதம் மூலம்: தினமலர் ஆன்மீக மலர் July Aug 2017